இதுவெறும் அறிவியல் சம்மந்தப்பட்ட வாக்கியம் மட்டுமல்ல அமைதியான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான ஆன்மீக தத்துவமும் இதில் பொதிந்துள்ளது.
அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைக்கும் வாக்கியம் இதுவென்று சொல்லியிருந்தேன் அல்லவா அது எப்படியென்று இப்போது சொல்கிறேன்.
குவாண்டம் மெக்கானிக்ஸ் என்னும் அணுஉலக கோட்பாட்டின் சிந்தனைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அலைவரிசையோடு முரண்பாடில்லாமல் ஒத்துப்போகும். அதுயெந்த சமயமென்று அதிகமாக யோசிக்கவேண்டாம் பௌத்திகம் என்னும் புத்தர் சிந்தனைகளுக்கு உட்பட்ட ஆன்மீக அலைவரிசைதான்.
புவியியல் மேதை மிசியோ காக்குவும் ஆன்மீக மேதை புத்தரும் என்னுள் நீக்கமற நிறைந்திருப்பதால் இந்த வாக்கியத்தைப்பற்றி சிரமமில்லாமல் தொடர்ந்து பேசலாமென்று எண்ணுகிறேன்.
ரியாலிட்டி என்றால் என்ன??.. அதிலும் குறிப்பாக கான்ஸ்ஷியஸ்னஸ் என்கிற உணர்வுநிலை நம்முடைய உடலில் எங்கேயிருக்கிறது.அதன்உருவம் எப்படியிருக்குமென்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலிடம் தெள்ளந்தெளிவான பதில் இருப்பதில்லை.
ஆனால் அதேசமயம் ஆன்மீக சிந்தனையில் அதுகுறித்து விளக்குவதென்றால் என்னுடைய உணர்வுநிலையென்பது நான்தான் என்னுடைய உருவம்தான் இங்கே எனது கண்களுக்கு உட்பட்ட மனிதர்கள் யாவரும் இப்படிப்பட்டவர்கள் அவர்களை அடையாளம் காட்டுகிற இவ்வுலகமும் பிரபஞ்சமும் அப்படிப்பட்டது என்கிற புரிதலை வகுத்தெடுத்து எனக்கான பிரபஞ்சத்தை நானே உருவாக்கிகொள்கிறேன் அல்லவா அதுதான் ரியாலிட்டி.
என்னுடைய அந்த ரியாலிட்டி பிழையில்லாத உண்மையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒருவேளை அது பொய்யாககூட இருக்கலாம். ஆனால் என்னுடைய உலகம் இப்படிப்பட்டது என்னுடைய மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று நம்பியவாறு என்னுடைய வாழ்க்கையை முன்னெடுக்கிறேன் அல்லவா அந்த நம்பிக்கையில் அடங்கியிருக்கிறது எனது ரியாலிட்டி.
எனது கண்களுக்கு புலப்படும் யாவற்றையும் நேர்மறையான சிந்தனையுடன் அன்பாக அணுகினால் எனது ரியாலிட்டியை சொர்க்கமாக அடையாளம் காணமுடியும். அதில்லாமல் ஒருவேளை அனைத்தையும் எதிர்மறையான சிந்தனையுடன் வெறுப்பாக அணுகும்பட்சத்தில் எனது ரியாலிட்டியை கொடிய நரகமாகவே அடையாளம் காணமுடியும். அனைத்துமே மனிதர்களுடைய சிந்தனைகளில் எண்ணங்களில் அடங்கியிருக்கிறது.
அதனால்தான் நாம் கண்ணால் காண்கிற காட்சிகளிலிருந்து காதால் கேட்கிற வார்த்தைகள் வாயினால் உதிர்க்கிற வார்த்தைகள் ஆகிய அனைத்திலும் ஆழ்ந்தகவனம் இருக்கவேண்டுமென்று ஞானிகள் அவ்வபோது குறிப்பிடுவார்கள். அதன்காரணமாகவே சினிமா சீரியல் போன்ற எதிர்மறை அலைவரிசைகளின்பால் நான் கவனம் செலுத்தியதில்லை.
குறிப்பாக புத்தர் தமது போதனைகளில் “We are what we think”, “We are raised with our thoughts”, “With our thoughts we make the world” என்று நிறைய ஞான உரைகளை உபதேசித்திருக்கிறார். அது அவருடைய மார்க்கத்திலேயே நிகரற்ற உண்மையாகியிருக்கிறது.
புரியும்படி சொல்லுவதென்றால் பைபிள் குரானை போன்று பௌத்திகம் ஒன்றும் தனித்துவமான ஒரே கோட்பாடு அல்ல ஒவ்வொரு நாட்டிலும் அது வித்தியாசப்படும் அதாவது அவருடைய சீடர்கள் எவ்விதமான புரிதலோடு அவருடைய போதனைகளை அந்தந்த நாட்டினில் கொண்டுசேர்த்தார்களோ அவ்விதமாக அதன் மார்க்கங்கள் பிரிந்திருக்கும்
புரிகிறதல்லவா எண்ணமே வாழ்க்கை என்பதுதான் நாம் வாழ்க்கையில் சந்தேகமில்லாமல் புரிந்துகொள்ள வேண்டிய நிதர்சனம்.
சிந்தனைகளுக்கு எப்போதுமே கட்டுக்கடங்காத சக்தி இருப்பதுண்டு அதனால்தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் அன்றே அறிவுறுத்திவிட்டு சென்றார். நேர்மறையான எண்ணங்களுக்கு அத்தனை வலிமை இருக்கிறது.நீங்கள் வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் அந்நாளை முன்னெடுப்பதற்கு முன்னர் கண்ணாடி முன்னின்று உங்கள் கண்களை பார்த்து ஐ லவ் யூ சோ மச்சென்று சொல்லிப்பாருங்கள் அந்த வார்த்தைகள் உங்களுக்குள் அத்தனை மாற்றங்களை ஏற்படுத்தும் படித்ததை சொல்லவில்லை உணர்ந்ததைதான் சொல்கிறேன்.
நற்சிந்தனைகளுடன் வாழ்க்கையை முன்னெடுத்தால் எப்பேர்பட்ட எதிர்மறையான சூழலிலும் துயரில்லாத அமைதியான வாழ்க்கையை வாழலாம்.
நேர்மறையான சிந்தனைகள் யாவும் மனிதனை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியத்தை ஒரு குட்டிகதையாக சொல்லிவிட்டு முடிக்கிறேன். நீங்கள் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு வாழ்க்கையை முன்னெடுத்தால் மகிழ்ச்சி.
முன்னொருசமயம் குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கெல்லாம் நல்லெண்ணங்கள் மனதில் நிறைந்திருக்கவேண்டிய அவசியத்தைபற்றி படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது அதனை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாத சீடன் ஒருவன் அதனை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஓர்சிறு உதாரணத்துடன் விளக்குமாறு வேண்டினான்.
சற்றுநேரம் யோசித்த குரு தனது குவளையிலுள்ள குடிநீரை அவனிடம் கொடுத்து அதனை அருந்தச்செய்தார். பிறகுஅதன் சுவைப்பற்றி கேள்வி எழுப்பினார். அவரது எண்ணப்போக்கை புரிந்துகொள்ளமுடியாத சீடன் இதென்ன கேள்வியென்பதுபோல அமிர்தத்தைபோல சுவையாக உள்ளது என்றான். பிறகு அதில் நிறையநிறைய உப்பைகலந்து மீண்டும் அருந்தச்செய்து அதன்சுவைப்பற்றி கேள்விஎழுப்பினார். அதனை அருந்தமுடியாத அவன் மிகவும் துவர்க்கிறது அருந்தமுடியவில்லை என்று முகத்தை சுளித்தான்.
அப்பதிலை எதிர்பார்த்திருந்த குரு ஓர்மெல்லிய புன்னகையுடன் அந்நீரை பெரிய குவளையிலுள்ள நீரிலும் பிறகு அதிலுள்ள நீரை அண்டாவிலுள்ள நீரிலும் இடம்மாற்றி ஒவ்வொரு சுவையையும் தனித்தனியாக அறிந்துவர பணித்தார்.
அவருடைய ஆணைகள் ஒவ்வொன்றையும் அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேற்றிய அச்சீடன் குருவிடம் நீரின்சுவை குறித்து பேசும்போது அந்த அளவிற்கு துவர்க்கவில்லை இருந்தாலும் சிறிதளவு துவர்க்கிறதுதான் என்றான் அதனால் அண்டாவிலுள்ள நீரை அருகிலுள்ள குளத்தில் கரைத்துவிட்டு அதன்சுவையை அறிந்துவருமாறு பணித்தார்.
பணியை முடித்துவிட்டு புன்னகையுடன் திரும்பிவந்த சீடன் நீர் துவர்க்கவில்லை குருவே நீருக்கு உண்டான அதே தனித்துவமான சுவையுடன்தான் இருந்தது துவர்ப்பு சுத்தமாக தெரியவில்லை என்றான்.
அப்போது அந்த பதிலை எதிர்பார்த்திருந்த குரு தன்னுடைய சீடனிடம் உப்பை உதாரணம்காட்டி அதனை தீயஎண்ணங்களோடு ஒப்பிட்டு, மனதில் இருக்கவேண்டிய நல்லெண்ணங்களின் அளவை குளத்து நீரோடு ஒப்பிட்டு உதாரணம் சொன்னார். சீடனும் மனதில் நிறைந்திருக்க வேண்டிய நல்லெண்ணெங்களின் அவசியத்தை முழுமையாக புரிந்துகொண்டான் உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
அதனால் வாழும் வாழ்க்கையென்று வரும்போது என்கையில் என்னயிருக்கிறது கடவுளுக்குத்தான் கண்ணில்லை என்மீது கருணையில்லையென்று புலம்பாமல் அனைத்தையும் உங்களது கைக்குள் கொண்டுவாருங்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் கடவுள் வேறுயாருமல்ல நீங்கள்தான் நீங்கள்மட்டும்தான்.
Once you Master your Thoughts, you will be master of your life – Buddha
சிந்தித்து செயல்படுங்கள்!!
நன்றி- வித்யா தேவி